தொடர்ந்து பல்வேறு தளங்களில் நாங்கள் சந்திக்கும் தற்சார்பு மிகுந்த மக்களின் கதைகளை அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டே வருகின்றோம். ஆனாலும், இயற்கை விவசாயத்தினை முறைப்படுத்துவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்குமான விதிமுறைகள் மற்றும் வரைமுறைகளில் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகின்றார்கள். தொழில் என்பதையும் தாண்டி வயிற்றுக்கு உணவிடும் தெய்வங்கள் என்றெல்லாம் வார்த்தைக்கு பேசிவிட்டு விவசாயிகளை மறந்துவிடுகின்றோம். மீண்டும் அவர்களை நினைக்கவும், அவர்களை நாடவும் வழிவகை செய்திருக்கின்றது இந்த ஜி.எஸ்.டி வரி. பல்வேறு பொருளாதார பிண்ணனியை சார்ந்த மக்களுக்கு புரியாத புதிராக இந்த வரி விதிப்பானது இருந்தாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு சென்று நாம் வாங்கும் பாக்கெட் உணவுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியானது மீண்டும் நம்மை நம் விவசாயிகளின் பக்கம் நடை போட வைத்திருக்கின்றது.

ஆழமாக யோசித்துப் பார்த்தால், வரி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படாத விவசாயிகளுக்கும், சிறு-குறு சந்தை காய்கறி விற்பனையாளர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மையினை அளித்திருக்கின்றது இந்த வரி அமைப்பானது. ஊர் பொருளாதாரத்தை விட்டுவிட்டு நம் வீட்டுப் பொருளாதாரத்தைப் பார்ப்போம். எங்கும் எவ்விடமும் இயற்கை விவசாயம், இயற்கை வேளாண்மை, கரிம வேளாண்மை, சுத்தம், ஆரோக்கியம் என்ற வார்த்தைகளை தொடர்ந்து கேட்டுவருகின்றோம். ஆனால், இதுப்பற்றிய தெளிவானது எத்தனை வாடிக்கையாளார்களை சென்று சேர்ந்திருக்கின்றது என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. இயற்கை விவசாயத்தில் தான் எதிர்கால சந்ததிகளின் ஆரோக்கியம் இருக்கின்றது என்று கூறும் எங்களாலும் கூறிவிட இயலவில்லை இயற்கை விவசாயத்திற்கான தெளிவினை எத்தனை வாடிக்கையாளர்கள் அடைந்திருக்கின்றார்கள் என்று… மீண்டும் மீண்டும் கூறிய விசயங்களைக் கூறி எங்களுக்கும் அலுத்துவிட்டது, உங்களுக்கும் வெறுத்திருக்கும் என்று நம்புகின்றோம். மாறாக, எங்களை எத்தனையோ வழியில் ஆர்வங்கொள்ளச்செய்த மக்களைப் பற்றிய பார்வையினை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம். நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கும் என்றும் நம்புகின்றோம்.

ஆதி தொட்டே அய்யா நம்மாழ்வார் பல்வேறு விவசாயிகளுக்கு முன்மாதிரியாக இருக்கின்றார். அவரைப் பின்பற்றியவர்கள், அவரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம் இயற்கை விவசாயத்தை தமிழகத்தின் மூலை முடுக்களில் சென்று சேர்க்கவேண்டும்  என்பது த். காய்கறிகள், கனி தரும் மரங்கள், மூலிகைச் செடிகள் என அனைத்தையும் வீட்டிலேயே பயிர் செய்து தற்சார்புடன் வாழ்வதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது இயற்கை விவசாயம். தமிழக வேளாண் பல்கலைக்கழகம் முறைப்படுத்தும் சில வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றது. அவற்றில் நாங்கள் கற்றுக்கொண்டவையை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மண் பரிசோதனை, பருவத்திற்கு ஏற்ற வகையில் பயிரிடல் போன்றவை கையில் சிறிதளவு நிலம் வைத்திருக்கும் மக்களுக்கான முதல் அறிவுரை. மாறாக, விதைத் தேர்வு செய்தல், பாரம்பரிய விதைகளை நடவு செய்தல் போன்றவை நிலம் வைத்திருப்பவர்களுக்கும், மாடித்தோட்டம் வைக்க விரும்புவர்களுக்காக உருவாக்கப்பட்டது. மரபு விதைகளை தற்பொழுது பல்வேறு இயற்கை விவசாயிகள் விதை பண்டமாற்ற முறையில் தேவைப்படுபவர்களுக்கு அளிக்கின்றார்கள். அதாவது ஒரு விவசாயி உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விதைகள் தந்தால், அதனை நடவு செய்து, அதில் வரும் விதைகளை இரு மடங்காக விதைகள் தந்த விவசாயிக்கு திருப்பித் தர வேண்டும். இவ்வாறாக உருவானதே திருவாரூர் நெற்திருவிழா. இம்முறைகள் பாரம்பரிய விதைகளிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளிற்கான முடிவாக அமையும்.

விவசாயம் என்பது பயிர் விதைத்து உணவு உற்பத்தியை அதிகம் செய்வது மட்டுமல்ல. அப்பயிரினை வளர்க்க தேவைப்படும் உரங்களை இயற்கையாக தயாரித்தல், இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல், விளைப்பொருட்களை முறையாக சந்தைப்படுத்துதல் ஆகியவையும் மறுமலர்ச்சி இயற்கை விவசாயத்தின் அங்ககங்களாக இருக்கின்றன. இதில் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் பல்வேறு தரப்பில் இருக்கும் விவசாயிகளை ஒன்றினைக்கின்றது இன்றைய விவசாயம். நிறைய இயற்கை வேளாண் கூட்டுறவுகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் பல ஆண்டுகளை முதலீடு செய்திருக்கின்றார்கள்.

 

அடுத்ததாக நீர் பாசனம். தொடர்ந்து பொய்த்துவரும் பருவ மழை மற்றும் மாசுபாட்டிற்கு உட்பட்ட நீர் நிலைகள் போன்றவைகளால் விவசாயம் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது. நீர் ஆதாரங்கள் குறைந்து வருவதால், இருக்கின்ற நீர் வசதியினை எவ்வாறாக சிறப்புற பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு அனைவருக்கும் தேவைப்படுகின்றது. பசுமை விகடன், நெற் திருவிழா, அக்ரி இண்டெக்ஸ், வானகம் போன்ற அமைப்புகள் இது தொடர்பாக நிறைய பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விவசாயிகளுக்கு வழிகாட்டியாக செயல்படுகின்றது.

மலர் சாகுபடி மற்றும் பணப்பயிர்களான தேயிலை, குளம்பி, கரும்பு, ஏலம் போன்றவற்றையும் இயற்கை விவசாயத்தின் வழியில் உற்பத்தி செய்வது இரசாயனமற்ற தமிழகத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகள். காய்கறி தோட்டம் என்பதோடு நின்றுவிடாமல் மூலிகைச் செடிகள் பலவற்றையும் வளர்ப்பது நன்மை தரும் ஒன்றாகும். இது போன்ற வீட்டுத் தோட்டத்தால் வருமானம் என்று ஒன்று இல்லை என்றாலும், எதற்கெடுத்தாலும் கடைக்குச் செல்ல வேண்டும்,  வணிகவளாகத்திற்கு செல்ல வேண்டும்,  சந்தைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் குறையும். செலவு செய்யாமல் இருப்பதும் ஒருவகையில் வருமானம் தானே. மூலிகைகளில், எப்போதும் புனிதமாக கருதப்படும் துளசி, திருநீர்பத்தினி போன்றவையை வளர்ப்பது அவசர கால சிகிச்சைக்கு உதவும். நாட்டு மருத்துவத்தையும், கை மருத்துவத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சாதாரண தலைவலி, காய்ச்சலிற்கும் கூட மருத்துவமனை போக வேண்டிய அவசியங்கள் இருக்காது. கிராமப்புற மக்களை விடுங்கள், நகர்புறத்தில் ஒரு உணவகத்திற்கு மூவர் இருக்கும் குடும்பம் சென்று வந்தால் இருவரின் இரண்டு நாள் சம்பளம் கைவிட்டு ஓடிவிடும். இருக்கும் பொருளாதார சிக்கல்களில் தினமும் வெளியில் உணவு என்பதைப் போலவே, தினமும் கடையில் காய்கறி வாங்குவதும் செலவிழுக்கும் செயல். குறைந்த அளவில் நேரமும், பணமும் செலவு செய்தால் ஆறு மாதங்களிற்கான இயற்கை காய்கறிகள், பழங்கள், கீரைகளை நாமே உற்பத்தி செய்யலாம். சிறிய மாற்றங்கள் பெரிய வளர்ச்சிக்கு பாதை காட்டும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *